Wednesday, July 9, 2014

களப்பணியாற்ற ஒற்றுமையுடன் வெளியே வாருங்கள்!!!




ஒரே இந்து. ஒரே ஒளி !

இறைவன் ஒருவனே. அவன் செயல்களை முன்வைத்து, அவன் தொழில்களை முன்வைத்து, பல்வேறு சூழ்நிலைகளை முன்வைத்து, பல்வேறு அவதாரங்களை முன்வைத்து, பல நல்லொழுக்கங்களை விளக்குவதற்கு என்று, நாம் பல்வேறு பெயர்கள் வைத்து இறைவனை வணங்கினாலும், அவன் ஒருவனே என்ற அடிப்படை தத்துவ கோட்பாடு நம் இந்து சமயத்தில் மிக வலுவானதாக இருக்கிறது.

இன்றைய சூழ்நிலையிலும், நாளைய தேவையின் அடிப்படையிலும், இந்துக்கள் அனைவரின் ஒற்றுமையும் இன்றியமையாத ஒன்றாக நம்முன் நிற்கிறது. இந்துக்களாகிய நாம் அனைவரும் “ஒரே இந்து. ஒரே ஒளி” என்ற ஒரே புள்ளியில் இணைந்திருப்பது மிக மிக அவசியம். உங்கள் தாய்தந்தையே முதற் கடவுள். அண்டத்தை ஆளும் இறைவன் அவர்களை விட பெரியவன். நீங்கள் அவனை எந்த பெயரில் வேண்டுமானாலும் உணர்ந்து கொள்ளுங்கள். எந்த உருவில் வேண்டுமானாலும் பூசித்து கொள்ளுங்கள். உங்கள் குலதெய்வங்களை போற்றி வணங்குங்கள். சாதி என்பது அவரவர் செய்த தொழிலை வைத்து பிறந்தது. சாதி தவறில்லை. ஆனால், சாதியை வைத்து ஏற்ற தாழ்வு செய்வது மாபெரும் தவறு. நீங்கள் உங்கள் வீட்டிற்குள் உங்கள் சாதி முறைகளை வலுவாக கடைப்பிடியுங்கள். ஆனால், ஒரே இந்து, ஒரே ஒளி என்ற மைய புள்ளியில் வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் எப்போதும் உறுதியாக இணைந்து இருங்கள். நாம் அனைவரும் சமம். நமக்குள் ஏற்ற தாழ்வுகள் இல்லை. இதைத் தான் நம் அடிப்படை தர்மமும் நமக்கு உணர்த்துகிறது. இதைக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயமும் கடமையும் நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

பல ஞானிகளும் சாதுக்களும், சித்தர்களும் இறைவனை பல்வேறு வடிவில் தரிசித்திருந்தாலும், இறைவனை ஒளியாகவே பெரும்பாலானோர் தரிசனம் செய்திருக்கிறார்கள். இறைவன் ஒளி வடிவானவன் என்று பலர் தங்கள் செய்யுளில் கூறியிருக்கிறார்கள். ஆகவே, அந்த ஒளியை மைய புள்ளியாக வைத்து நாம் என்றும் இணைந்திருப்போம். நாம் அனைவரும் இந்து என்ற தர்மத்தின் வெவ்வேறு உறுப்புகளாக இருந்து ஒருங்கிணைந்து செயல் படுவோம். இதுவே தர்மம். இதுவே நியதி. இதுவே தேவையுமாகும்.

களப்பணியே திருப்பணி. தர்மம் காக்க யாது செய்தல் வேண்டும் ?

இறைவனை உணர்ந்த அடியார்கள், தங்கள் வேலைகளையும் இன்பங்களையும் துறந்து, இறைவன் பணியே தம் பணி என்று அவனை பாடி புகழ்ந்து கொண்டே தம் வாழ்நாள் முழுவதும் செலவிட்டார்கள். தன்னலமற்ற இவர்கள், துரித போக்குவரத்து வசதி இல்லாத காலத்திலும், மலை, காடு, ஏரிகளை கடந்து, ஊர் ஊராக சென்று, அங்குள்ள கோவில்களில் இறைவனை தரிசித்தும் அவனை புகழ்ந்து பாடியும் பிரசங்கம் செய்தும் வாழ்ந்தார்கள். இவர்களாலேயே நம் சமயம் ஒவ்வொரு ஊரிலும் பரவி வலுப்பெற்றது.

ஒவ்வொரு ஊராக சென்று, ஒவ்வொரு வீதியாக, ஒவ்வொரு வீடாக களமிறங்கி நாம் பணி செய்யாதவரை நாம் நம் நாட்டின் வளத்தினையும் பெருமையையும் காப்பாற்ற இயலாது. சொகுசான சோபாவில் அமர்ந்து கொண்டு டிவி சேனல்களை மாற்றிக் கொண்டு முகநூலில் அரட்டையடித்து கொண்டு எதையுமே சாதிக்க முடியாது. முகநூலில் நாம் அறிவை பகிர்ந்து கொண்டு, களத்தில் இறங்கி, களப்பணியாற்றாத வரை ஒரு சிறு புல்லை கூட நம்மால் வீழ்த்த முடியாது. ஆகவே, நாம் ஒவ்வொருவரும் களத்தில் இறங்கி வேலை செய்வது இன்றியமையாதது.

இந்த புண்ணிய பாரத திருநாட்டிற்கு நீங்கள் பல்வேறு வகைகளில் களப்பணி செய்யலாம்.

நீங்கள் பணவசதி மிக்கவர்களாக இருப்பின்

உங்கள் தெருவில் அருகாமையில் இருக்கும் கோவில்களில் அன்னதானம் ஏற்பாடு செய்து நம் விழிப்புணர்வு துண்டறிக்கைகளை வழங்கலாம்.
கோவில் நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசித்து விளக்கு பூசைகளுக்கு ஏற்பாடு செய்து நடத்தலாம். கோவில் நிர்வாகிகளோடு மிகுந்த உறவை வளர்த்து அவர்களோடு இணைந்து பல நல்ல காரியங்களை திட்டமிட்டு செய்யலாம்.
பஜனைப் பாடல்களை தொகுத்து புத்தகமாக வெளியிட்டு பக்தர்கள் அனைவருக்கும் கொடுக்கலாம்.
ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் ஆன்மீக வகுப்புகள் இந்த கோவில்களில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்து வழிநடத்தலாம். உங்கள் ஊரில் சிறப்பாக பேசுபவர்களை அழைத்து ஒவ்வொரு தலைப்பிலும் ஒவ்வொரு வாரமும் கோவில்களில் பேச செய்யலாம். நாயன்மார்கள் ஆழ்வார்கள் கதைகளை நம் இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கும் போதிப்பது மிக மிக அவசியம்.
பண்டிகை காலங்களில் சிறு சிறு விழாக்களுக்கு ஏற்பாடு செய்து நடத்தலாம். சிவராத்திரி, பிரதோஷம் போன்ற நாட்களில் பிரசாதமும் புத்தகங்களும் வழங்கலாம்.
தேவாரம் திருவாசகம், திருக்குறள், கீதை போன்ற புத்தகங்களை இலவசமாக உங்கள் ஊரில் இருப்பவர்களுக்கு அச்சடித்து வழங்கலாம்.
பணவசதி மிக்கவர்களும், மற்றவர்களும்

கோவில்களில் அத்தனை பூசைகளிலும் கலந்து கொண்டு இறைவன் பாடல்களை பாட வேண்டும்.
சொற்பொழிவு ஆற்றுபவர்கள் பல தலைப்புகளில் பேசலாம்.
விழிப்புணர்வு துண்டறிக்கைகளையும் மற்ற பிற நூல்கள், தகவல்களை கோவிலுக்கு வருபவர்களுக்கு விநியோகித்து பணியாற்றலாம்.
விழாக்காலங்களில் விழா ஏற்பாடுகளை கவனித்து உதவி செய்யலாம்.
பள்ளிக்கு செல்ல முடியாத குழந்தைகளை அழைத்து வந்து ஞாயிற்று கிழமைகளில் கோவில்களில் வைத்தே பாடம் சொல்லி கொடுக்கலாம்.
உங்கள் தெருவில் இருப்பவர்களின் கஷ்டங்களை கேட்டு அவர்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள். கஷ்டங்களை சொல்ல முடியால் எத்தனையோ மக்கள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் நீங்கள் காது கொடுத்து கேட்டாலே அவர்களுக்கு ஒரு ஆறுதலாக இருக்கும்.
கோவில் பராமரிப்பு பணிகள், உழவாரப் பணிகளில் தவறாது கலந்து கொள்ளுங்கள். உங்கள் தெருவில் இருக்கும் கோவில்களையும் எல்லா கோவில்களையும் தூய்மையாக வைத்திருக்க உதவுங்கள். பல உழவாரபணி மன்றங்கள் இயங்கி வருகின்றன. இவர்களை அறிந்து இவர்களோடு கூட்டு சேர்ந்து இந்த பணியில் செயலாற்றுங்கள். உழவார பணிமன்றம் இல்லாத பட்சத்தில் அவ்வாறான ஒரு மன்றத்தை உருவாக்கி உங்கள் நண்பர்களை இணைத்து செயல்படுங்கள்.
நீங்கள் இவ்வுலகில் எந்த வேலையில் எந்த உயர்ந்த பதவியில் இருந்தாலும் சரி, இறைவன் முன்னர் அனைவரும் சமம். உங்கள் அகந்தையை அகற்றி செயல்படுங்கள். இதை குறிக்கவே நீங்கள் கோவில் கொடிமரத்திற்கு முன்னர் உங்கள் உடல் முழுவதும் தரையில் பதியும் வண்ணம் வீழ்ந்து வணங்குகின்றீர்கள்.

மாத சம்பளத்தில் ஒரு தொகையை (ஐநூறோ, ஆயிரமோ, பத்தாயிரமோ) நம் பணிக்கென்றே ஒதுக்கி செலவிடலாம். இவ்வாறு தொடர்ந்து கண்டிப்பாக ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு தெருவிலும் செய்ய வேண்டும். உங்கள் தெருவில் இருக்கும் கோவில்களை அடித்தளமாக கொண்டு இயங்குங்கள். நாம் இவ்வளவு காலமாக இவ்வாறு இயங்கி தான் மகிழ்ச்சியான வாழ்வு வாழ்ந்து வந்தோம். தற்போது இது போன்ற நல்ல செயல்கள் நடக்காத காரணத்தினாலேயே, மக்கள் பக்தியற்று தொலைக்காட்சியிலும் சினிமாவிலும் லயித்து ஜடப்பொருளாக மாறி இருக்கின்றனர். இவர்களே புற சமயத்தாரின் வலைகளில் எளிதாக சிக்குகின்றனர். இன்னொரு பக்கம் பகுத்தறிவு, மூடநம்பிக்கை என்று அஞ்ஞானத்தை பரப்பி நம்மை பிளவுபடுத்தி இன்று மதுவுக்கும் தொலைக்காட்சி நிழலுக்கும் நம்மை அடிமையாக்கி புறசமயத்தாரை ஊடுருவ வைத்துள்ளனர். தொலைக்காட்சி நிழலும், சினிமா நிழலும், மதுவின் போதையும் உங்களுக்கு வாழ்வில் எந்த ஏற்றத்தையும் தராது. மிகுந்த கெடுதல் தான் கொடுக்கும். இவ்வுலகம் கஷ்டப்படுவது கெட்டவர்களால் அல்ல, நல்லவர்களின் செயலற்ற தன்மையால் என்று கூறுவது மிகையாகாது. நீங்கள் நல்லவர்கள் எனில் உங்கள் கடமையை இன்றே இப்போதே தொடங்குங்கள்

தன் கடமையை செவ்வனே செய்யாத நல்லவரும் கெட்டவரே.
ஒவ்வொரு தெருவிலும் களமிறங்கி உங்களால் இயன்ற செயல்களை திட்டமிட்டு செய்யாமல், அஞ்ஞான மதமாற்றத்தை நம்மால் தடுக்க இயலாது. நாம் நம் கடமைகளை சரிவர செய்துவிட்டாலே, தடம் மாறிப்போன நம் சகோதரர்களும் தாய் மதம் திரும்புவர். இது சத்தியம்.

இந்த பாரத நாட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் ஒரு சிறந்த தலைவர். இன்னொருவர் வந்து உங்களிடம் இது செய், அது செய் என்று கூறுவதற்கு முன்னரே, நீங்களே ஆராய்ந்து செயத்தக்க செயல்களை எண்ணி, திட்டமிட்டு செயலாற்றுங்கள். தலைவர் ஒருவர் வந்து உங்களிடம் ஒவ்வொரு செயலையும் செய்ய சொல்லும் வரை காத்திருக்காமல் சுயமாக சிந்தித்து சுயமாக செயல்படுங்கள். உங்களின் கேள்விகளையும் சந்தேகங்களையும், தேவையான உதவிகளையும் இங்கே கேளுங்கள். உங்களால் இயன்ற அனைத்து செயல்களையும் இன்றே துவங்கி செய்யுங்கள். இதுவே நீங்கள் இந்த மனித பிறவி எடுத்ததன் பயனாகும். இந்த செயல்களினால் மட்டுமே உங்களுக்கு பேரின்பமும் ஆத்ம திருப்தியும் கிடைக்கும்.

நான் என் களப்பணியை சில மாதங்களுக்கு முன்னரே ஆரம்பித்து விட்டேன். அப்போ நீங்கள் ?

வாழ்க வளமுடன். இந்து தர்மம் காக்க இப்போதே வீட்டை விட்டு வெளியே வந்து களப்பணி ஆற்றுவோம்.

No comments:

Post a Comment