
இணையமும் தகவல் தொழில் நுட்பமும் பெரிதாக வளராத 1990களில் சீதாராம் கோயல் இதை எழுதியிருக்கிறார் என்பதை எண்ணிப் பார்க்கையில் பிரமிப்பும் அவர் மீது பெரும் மரியாதையும் ஏற்படுகிற்து. அவரது புனித நினைவுக்கு இந்த மொழியாக்கம் சமர்ப்பணம்].
காபா முன்பு ஒரு சிவாலயமாக இருந்து பிறகு முகமது நபியால் மசூதியாக மாற்றப் பட்டது என்ற கருத்தை முன்வைக்கும் ஒரு கட்டுரையை சில வருடங்கள் முன்பு படித்தேன். அந்தக் கட்டுரையின்படி அப்போது காபாவின் பிரதான தெய்வமாக இருந்த மகாதேவரைக் குறித்த ஒரு நீளமான பழைய அரபி மொழிப் பாடலும் அதில் கொடுக்கப் பட்டிருந்தது. பொ.மு. முதல் நூற்றாண்டில் உஜ்ஜயினியை ஆண்ட விக்கிரமாதித்தன் காலத்தில் இயற்றப் பட்ட பாடல் அது என்றும் அந்தக் கட்டுரை சொன்னது.
[பொ.மு: பொதுயுகத்திற்கு முன், Before Common Era, BCE. பொ.பி: பொதுயுகத்திற்குப் பின், Common Era, CE]
அந்தக் கட்டுரையைப் படித்த எனது நண்பர் ஒருவர் ஆர்வ மேலீட்டால் ஒரு காரியத்தில் இறங்கினார். இப்போது நமக்குக் கிடைத்துள்ள இஸ்லாமுக்கு முந்தைய காலகட்டத்திய அரபு இலக்கியத் தொகுப்புகள் எல்லாவற்றையும் அலசி அதில் இந்தப் பாடல் இருக்கிறதா என்று தேட முயன்றார். இதற்காக வெளிநாடுகளில் உள்ள பல நூலகங்களையும் தொடர்பு கொண்டார். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. எனவே, ”உலகின் எல்லா இடங்களிலும் உள்ள பல பழைய கட்டிடங்களும் ஏதோ ஒரு காலத்தில் ஹிந்து சின்ன்ங்களாக இருந்தவையே” என்பதான அரிய கருத்துக்களைக் கூறும் மரபைச் சேர்ந்த “ஹிந்து வரலாற்றாசிரியர்களின்” இன்னொரு தயாரிப்பாக இருக்கக் கூடும் என்று கருதி நானும் அவரும் அந்தக் கட்டுரையை முழுவதுமாக நிராகரித்து விட்டோம்.
ஆனால் தற்போதைய ஆய்வின் போது நான் கண்டறிந்த சில தகவல்கள் எனது தீர்ப்பை மாற்றிக் கொள்ள என்னைத் தூண்டுகின்றன. காபா ஒரு சிவாலயமாகத் தான் இருந்தது என்று அறுதியிட்டு இப்போதும் என்னால் கூறமுடியாது தான். ஆனால் சான்றுகளின் அடிப்படையில் பார்த்தால், காபா ஒரு புகழ்பெற்ற ஹிந்து புனிதத் தலமாக இருந்தது என்ற முடிபை ஒரேயடியாகத் தள்ளி விடமுடியாது. இந்த ஆய்வுத் தகவல்கள் எப்படி வேண்டுமானாலும் மதிப்பிடப் படட்டும். இந்தக் கட்டுரையில் அவற்றை முன்வைக்கிறேன்.
No comments:
Post a Comment