இது இங்கு கொடுக்கப் பட்டுள்ள அகழாய்வில் கிடைத்த ’வத்’ சிற்ப உருவத்துடன் பொருந்துவதில்லை என்று பார்த்தவுடன் தெரிகிறது. இந்தப் படத்தில் ஒரு குள்ள உருவம், ஸ்காட்லாந்து படைவீரர்கள் போன்று மடிப்புகளுடன் கூடிய, பாவாடை போன்ற உடையணிந்திருப்பதாகக் காட்டப் படுகிறது. தலையில் உள்ள தொப்பியில் ஆரம் போன்று தொங்கும் இழைகள் நீண்ட மயிர்க்கற்றைகளைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.
இன்றைய காலகட்டத்தில் கூட, கிராமப்புறங்களில் இருந்து ஏமன் நாட்டின் ஏடன் (Aden) துறைமுக நகருக்கு வரும் பதூனிகள் (Beduins – ஒட்டகம் வளர்க்கும் அரபு பழங்குடியினர்) தங்கள் தலையின் கீழ்ப்பகுதியை சிரைத்துக் கொள்வதையும், உச்சியில் சிறு குடுமி வைத்துக் கொள்வதையும், சில சமயம் இந்துக்களைப் போன்று நீண்ட கூந்தலை குடுமியாக அள்ளி முடிவதையும் காண முடியும். இதன் அடிப்படையில், அரேபிய மக்களுக்கும் சிந்து சமவெளி மக்களுக்கும் தொடர்பு இருந்திருக்குமோ என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. இந்தப் படத்தை சர் ஜான் மார்ஷல் (Sir John Marshall) அவர்களுக்கு அனுப்பினேன். அவர் எனக்கு அனுப்பிய பதிலில், இந்த பாவாடை அணிந்த அரபிய தெய்வ உருவத்திற்கும் சிந்து சமவெளிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தாம் கருதுவதாகக் குறிப்பிட்டிருந்தார். பாவாடைகள் எல்லாக் காலகட்டங்களிலும் அணியப் பட்டன; ஆனால் இந்த உருவம் சிந்துசமவெளி நாகரீகத்திற்கு 2500 ஆண்டுகள் பிந்தைய காலத்தியது என்றும் கூறினார். அதாவது, இந்த உருவத்தை பொ.மு 800 காலத்தியதாக அவர் மதிப்பிட்டார்.”4
ஆனால் சர் ஜான் மார்ஷலின் காலத்திற்குப் பிறகு செய்யப் பட்ட பல அகழ்வாராய்ச்சிகள் அரேபியாவுக்கும் சிந்து பிரதேசத்திற்குமிடையே இடையறாத தொடர்புகள் இருந்தன என்று சந்தேகமின்றி நிரூபிக்கின்றன. இந்தத் தொடர்புகள் சிந்துவெளி நாகரீக காலத்திலேயே தொடங்கி விட்டன. சிந்து, பலுசிஸ்தான், மக்ரான், ஈரானின் தெற்குப் பகுதியிலுள்ள ஃபார்ஸ் மாகாணம் (Fars Province) , பாரசீக வளைகுடா தீவுப் பிரதேசங்கள், தெற்கு அரேபியா ஆகிய பகுதிகள் பெரிதும் ஒத்த கலாசார, பண்பாட்டு அம்சங்களைக் கொண்டிருந்தன என்பதில் ஐயமில்லை.
பாகனிய அரபு தெய்வங்கள்
பயணங்களாலும், வணிகத்தாலும் ஏற்பட்ட நீண்டகாலத் தொடர்புகள், செழுமையான கலாசாரத் தொடர்புகளுக்கும் வழிவகுத்தன. குறிப்பாக, ஹிந்துக்களும் சரி, பாகனிய வழிபாட்டாளர்களாக இருந்த அரபிக்களும் சரி, தீர்க்கதரிசி மதங்களுக்கே உரியதான பிறரை விலக்கும் தன்மையை (exclusivism) கொண்டிருக்கவில்லை. இஸ்லாமுக்கு முந்தைய பழைய அரபு தெய்வ வடிவங்களில் சில இந்து தெய்வங்களைப் போன்றவையே என்பதை முன்பு பார்த்தோம். இயற்கை வழிபாட்டு பாகனிய மனநிலை (the pagan psyche) எல்லா தேசங்களிலும், எல்லா காலங்களிலும் தெய்வங்கள் குறித்து ஒரே விதமான படிமங்களையும், உருவகங்களையும், புராணங்களையுமே வெளிப்படுத்துகிறது என்பதை மதங்களை ஒப்பீடு செய்து பயிலும் ஆய்வாளர்களூம், மாணவர்களும் நன்கு அறிவார்கள்.
குறிப்பாக, தெற்கு அரேபியாவின் மிகப் பழைய குடிகளான ஸபையூன்கள் (Sabaeans) இந்தியாவுடன் மிகச் செழிப்பான வணிகம் செய்து வந்தனர். இந்தியாவின் மேற்குக் கடற்கரை முழுவதும் அவர்கள் குடியிருப்புகளை நிறுவியிருந்தனர். அவர்கள் சூரிய வழிபாட்டாளர்கள் என்பதால் தங்கள் பகுதிகளில் பிரசித்தி பெற்ற சூரிய ஆலயங்களையும் அமைத்திருந்தனர். அவர்கள் மறுபிறவிக் கொள்கையிலும், யுகங்கள் குறித்த காலச் சுழற்சி முறை பற்றிய கொள்கையிலும் நம்பிக்கை கொண்டிருந்தனர். முக்கியமான இன்னொரு விஷயம் – ஸபையூன்களின் மத ஸ்தாபகராக பூதாஸ்ப் (Bûdasp) என்பவரை அரபிகள் குறிப்பிடுகின்றனர்.5 இந்த பூதாஸ்ப் போதிசத்துவரே அன்றி வேறொருவர் இல்லை.
பண்டைய அரேபிய விக்கிர ஆராதனைகளில், பால் (Baal) என்ற தெய்வத்தின் வழிபாடு மிகப் பரவலாக இருந்த்து. இந்த தெய்வத்தைக் குறித்து பைபிளிலும், குரானிலும் நிறைய வசைபாடல் உள்ளது. குரானின் 37.123 வசனத்திற்கு விரிவுரை எழுதுகையில் அப்துல்லா யூசுப் அலி கூறுகிறார் – ”சிரியாவின் பால் என்ற சூரியக் கடவுள் வழிபாடு பெருவளர்ச்சியடைந்த போது, அஹப், அசரியா (Ahab, Azariah) ஆகிய கடவுளர்களின் வழிபாடு தேய்ந்து மங்கியது. பால் கடவுள் வழிபாட்டில் இயற்கை சக்திகளை வணங்குதல், இந்தியாவின் லிங்க வழிபாடு போல உயிர் பிறப்பிக்கும் சக்திகளை வணங்குதல் ஆகிய அம்சங்களும் இருந்தன.”6.
இந்தக் கருத்து W.ராபர்ட்சன் ஸ்மித் எழுதியிருக்கும் Religion of the Ancient Semites நூலின் மூலம் மேலும் உறுதியாகிறது. பால் கடவுள் பற்றி, “இந்துக்களின் லிங்க வடிவத்தைப் போன்றே, கூம்பு வடிவமான, செங்குத்தாக நிற்கும் உருண்டைக் கற்கள் அந்த தெய்வத்தின் சின்னமாக இருந்தன” என்றும் “இனப்பெருக்கத்திற்கான ஆண் தத்துவத்தைக் குறித்தன” என்றும் அவர் குறிப்பிடுகிறார்7. அரேபியாவில் அக்கால கட்ட்த்தில் வசித்த இந்துக்கள் பால் கடவுளை சிவலிங்கமாகவே கருதி வழிபட்டிருந்தால் அது ஆச்சரியமே இல்லை. இது போன்ற பல சிவலிங்க உருவங்கள் காபாவிலும், அதைச் சுற்றிய பகுதிகளிலும், அரேபியாவின் பற்ற இடங்களிலும் கட்டாயம் இருந்திருக்க வேண்டும்.
No comments:
Post a Comment