பண்டைய அரேபியாவில் இந்துக்கள்
பண்டைய இந்தியாவில் தமிழகம், கேரளம், மகாராஷ்டிரம், குஜராத், சிந்த், பலுசிஸ்தான், மக்ரான் ஆகிய பிரதேசங்களின் கடற்கரைகளில் பல துறைமுகங்கள் இருந்தன. (மக்ரான் – Makran – இன்றைய ஈரான், பாகிஸ்தானின் சில பகுதிகளை உள்ளடக்கிய கடற்கரைப் பிரதேசம், ஒரு காலத்தில் இந்தியாவின் அங்கமாக இருந்தது). இத் துறைமுகங்கள் ஹரப்பா நாகரிகத்திற்கு முந்தைய காலகட்டத்திலிருந்தே பணப் புழக்கம் மிகுந்த, தொடர்ச்சியான கடல் வணிகத்தில் ஈடுபட்டு வந்தன எனபதற்கு இப்போது ஏராளமான அகழ்வுச் சான்றுகளும், இலக்கியச் சான்றுகளும் உள்ளன. மேலதிக சான்றுகளும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றன1.
சீனா, மலேசியா, இந்தோனேசியா, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகள் ஒரு பக்கத்திலிருந்தும், ஈரான், அரேபியா, எதியோப்பியா, எகிப்து, மேற்கு ஆசியா, ஐரோப்பா மறு பக்கத்திலிருந்தும் இந்த வணிகத்தில் பங்கேற்றன. இந்தியாவிலிருந்து உணவுப் பொருட்களும், உலோகங்களும், பல்வேறு தொழில்சார்ந்த தயாரிப்புகளும் ஏற்றுமதி செய்யப் பட்டது இந்த வணிகத்தின் முக்கிய அம்சமாக இருந்தது. அரபிக் கடல், பாரசீக வளைகுடா, செங்கடல், மத்திய தரைக்கடல் ஆகியவற்றின் கரைகளை ஒட்டிய நாடுகளின் கடற்கரைப் பிரதேசங்களிலெல்லாம் இந்திய வணிகர்களின் குடியிருப்புக்கள் இருந்தன. மேற்குறிப்பிட்ட இந்தியத் துறைமுகப் பகுதிகளிலும் அரேபிய, ஈரானிய, எதியோப்பிய, எகிப்திய, சிரிய, ஐரோப்பிய வணிகர்களின் குடியிருப்புக்கள் இருந்தன. மற்ற அனைவரையும் விட எதியோப்பிய, அரேபிய வணிகர்களே அதிகமாக இருந்தனர்.
இஸ்லாம் தோன்றிய காலகட்டத்தில் அரேபியாவில் இந்துக்கள் கணிசமான அளவில் இருந்தனர் என்பதற்கு இப்னு இஷாக் (Ibn Ishaq) சான்று பகர்கிறார். அபிசீனியர்கள் ஏமன் நாட்டின் மீது படையெடுத்தபோது அரபிகளில் சக்தி வாய்ந்த ஹிமாய (Himayrite) பழங்குடியின் தலைவர் ஸாயிஃப் தூ யஜான் (Sayf b. Dhû Yazan) ஈரானிய அரசர் குஸ்ருவிடம் (Chosroes) உதவி கேட்கப் போகிறார். அவர் சொல்கிறார் “அரசே, கருங்காக்கைகள் (ravens) எங்கள் நாட்டை ஆக்கிரமித்து விட்டன”. குஸ்ரு கேட்கிறார், “எந்தக் காக்கைகள்? அபிசினீயர்களா, சிந்தியர்களா?”2
காக்கைகள் என்பது கறுப்பின மக்களைக் குறிக்கும் சொல். அந்தக் காலகட்ட்த்தில் அரேபியர்களும், ஈரானியர்களும் இந்தச் சொல்லால் இந்தியர்களையும், அபிசீனியர்களையும் அடையாளப் படுத்தினர்.
இன்னொரு சான்று. முகமது நபியைப் பார்ப்பதற்காக பி அல் ஹாரித் (B. al-Hãrith) குழு வந்திருந்தது. “அவர்கள் நபியிடம் வந்தபோது, இந்தியர்களைப் போன்று தோற்றமளிக்கும் இவர்கள் யார்?” என்று நபி கேட்டார். அவர்கள் பி அல் ஹாரித் பி காப் (B. al-Hãrith b. Ka’b.) குழுவினர் என்று சொன்னார்கள்”3. இதன்மூலம் முகமது நபியவர்களுக்கு இந்தியர்களைப் பற்றி நன்கு பரிச்சயம் இருந்தது என்றே தோன்றுகிறது.
இஸ்லாமுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த “வத்” (Wadd) என்ற அரேபிய தெய்வத்தின் உருவம் குறித்து அறிஞர் Ch.முகமது இஸ்மாயில் இவ்வாறு எழுதுகிறார் (‘An Image of Wadd: A Pre-Islamic Arabian God’ என்ற கட்டுரை) -
“பழைய அரபுப் பதிவுகளின் படி, வத் நெடிய உருவம் கொண்டவர்; இடையில் குறுக்காகக் கட்டப் பட்ட துணியும், அதன் மீது வேறொரு துணியும் கொண்ட ஆடையணிந்தவர்; வாள், வில், அம்பறாத்துணி ஆகிய ஆயுதங்களைத் தாங்கியவர். அவரது உருவத்திற்கு முன்பாக, ஒரு உலக்கையும் அதனுடன் இணைந்த ஒரு கொடியும் சித்தரிக்கப் படும்.
No comments:
Post a Comment